ஸ்டாலின் ஆசைப்பட்டால் பிரதமர் ஆகலாம்: குஷ்பு
பைல் படம்.
நடிகை குஷ்பூ டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நேற்று பதவி ஏற்று கொண்ட நிலையில் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது:
தேசிய மகளிர் ஆணையத்தில் எனக்கு ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேற்று தான் டெல்லியில் பதவி ஏற்று கொண்டேன். சென்னையில் என் வேலைகளை முடித்து விட்டு திரும்ப டெல்லி செல்கிறேன். பிரதமர் மோடிக்கும், இந்தியா அரசுக்கும், தேசிய மகளிர் ஆணையத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் பொறுப்பான பதவி எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு முறையும் பெண்களுக்காக குரல் கொடுத்துள்ளேன். அதனை வைத்து என்னால் இந்த பதவியை ஏற்றுகொள்ள முடியும் என்று நம்பி இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெண்களுக்கு பல துறைகளில் பிரச்சனைகள் வந்துகொண்டுதான் உள்ளது. செய்தித்தாள், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் செய்திகள் வருவதை பார்க்க முடிகிறது. சராசரி பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் பிரச்சினை உள்ளது. பேருந்தில் பெண்கள் பயணிக்கும் போது அவர்களை உரசுவதும் ஒரு பாலியல் ரீதியான வன்கொடுமைதான். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு எப்படி முற்று புள்ளி வைப்பது எப்படி அதனை சமாளிப்பது என்பதுதான் முக்கியம்.
தமிழ்நாடு, காஷ்மீர் அல்லது வேறு மாநிலமோ என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை. ஒரு பெண்ணுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அது கட்சிகள் மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. நம் இந்தியாவில் உள்ள பெண்ணிற்கு, நம் வீட்டு பெண்ணிற்கு ஏற்பட்டது என்று எண்ண வேண்டும். இந்தியா நம் தாய் நாடு நம்முடைய தாய்க்கு ஒரு பிரச்சினை என்று நினைக்க வேண்டும் என கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய குஷ்பு கட்சி ரீதியாக வேறு வேறு இடத்தில் இருந்தாலும் எனக்கும் அவர் முதலமைச்சர்தான் அந்த மரியாதை எனக்கும் உண்டு. அவருடைய கட்சியில் நான் ஆறு வருடமாக வேலை பார்த்துள்ளேன். எப்படிப்பட்ட உழைப்பாளி என்றும் எனக்கு தெரியும். அவர் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன் அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஸ்டாலின் அவர்களுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம். இந்திய நாட்டில் ஜனநியாயக ரீதியாக யார் வேண்டுமானாலும் பிரதமர், முதலமைச்சர் ஆகலாம். பிரதமர் ஆகவேண்டும் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் வாக்களித்த காரணத்தால்தான் ஸ்டாலின் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக உள்ளார்.
ஈரோடு தேர்தலில் 74 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர் பார்ப்போம் யார் வெற்றி பெறுகிறார் என்று. பதவி என்பது வேறு, தலைவர் என்பது வேறு. பெண்களுக்கு நியாயம் வாங்கி கொடுப்பதற்கான அமைப்பு தான் தேசிய மகளிர் ஆணையம். நாங்கள் சட்டத்தை எங்கள் கையில் எடுக்க முடியாது. அதற்காக குரல் கொடுத்து நீதியை பெற்று தருவோம். பெண்களுக்கான அமைப்பு ஒன்று உள்ளது. 24 மணி நேரமும் எங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எங்களுடைய வலை தளங்கள் உள்ளது. இது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளேன். கிராமத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு தைரியம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu