ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில், இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பூலோக வைகுந்தம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில், வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக மூலஸ்தானத்தில் இருந்து, ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு, விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி, பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன் புறப்பட்டு, இன்று அதிகாலை 4:45 மணிக்கு ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பரமபத வாசலை (சொர்க்கவாசலை) கடந்தார்.


இந்த திருவிழாவிற்காக, கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதியிலிருந்து பகல் பத்து விழாவில் திருநெடுந்தாண்டகத்துடன், ஒவ்வொரு நாளும் ஸ்ரீ நம்பெருமாள் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மூலஸ்தானத்தில் இருந்து அர்ஜுன மண்டபத்திற்கு வந்தடைந்து . பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை தொடர்ந்து, சொர்க்கவாசல் திறப்பான இராப்பத்து முதல் நாளான இன்று முதல் ஸ்ரீ நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.


இந்த சொர்க்கவாசல் திறப்பு (கொரோனா தொற்று காரணமாக) நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் பக்தர்களை தனிமனித இடைவெளி கடைப்பிடித்து கோயிலில் உள்ளே அனுமதித்தனர். அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலில் இருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா என்பதால் திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பின்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் காலை 7 மணிமுதல் அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!