தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்
X

தமிழக முதல்வர் ஸ்டாலின். (கோப்பு படம்).

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் இருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, தமிழக மீளவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கினர்.

இதில், 6 மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் விவரம் வருமாறு:

இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டனர்.

காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்ககை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும். தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும்.

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமுற்று தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்கை பெற்றுவரும் முருகன் என்பவருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டு உள்ளேன் என முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்