தொண்டை வலி, சளி, இருமலுடன் பரவும் வைரஸ் காய்ச்சல்

தொண்டை வலி, சளி, இருமலுடன் பரவும் வைரஸ் காய்ச்சல்
X

மாதிரி படம் 

காலநிலை மாறுபாடு காரணமாக தொண்டை வலி, சளி, இருமலுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தற்போது கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகு. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதன் மூலம் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, எலி காய்ச்சல் போன்றவை வைரஸ் கிருமிகளால் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுதவிர தற்போதுள்ள காலநிலை மாற்றமும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.

மாறுபட்ட இந்த காலநிலையால் சளி, இருமல், தொண்டைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது. தும்மல், சளி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த வைரஸ் அடுத்துவரும் நாட்களில் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

வழக்கமாக வரும் நோயாளிகளை விட தற்போது அரசு, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சளி, இருமல், தொண்டை வலி போன்ற சாதாரண பாதிப்புகளுடன் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்கள் அதில் இருந்து விடுபட ஒரு வாரம் ஆகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. குழந்தை மருத்துவரிடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. கடந்த வாரம் மழைவிட்டு விட்டு பெய்தும் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 4 நாட்கள் நீடித்த ரம்மியமான சூழலை தொடர்ந்து வெயில் சுட்டெரித்தது. இயல்பு நிலையைவிட வெயில் அதிகரித்துள்ளது. இதனால் உடலில் உஷ்ணம் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குளிர்ந்த தண்ணீர் குடிப்பது, ஏ.சி.யில் உறங்குவது போன்றவற்றால் சிலருக்கு சளி, இருமல் தொந்தரவு அதிகமாகி காய்ச்சல் பாதித்தது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது,

தற்போது ஒரு விதமான வைரஸ் பாதிப்பு உள்ளது. அது டெங்கு வைரஸ் இல்லை. ஆனால் டெங்குவிற்கான அறிகுறிகள் போலவே நோயாளிகளுக்கு உள்ளன. பரிசோதனை செய்து பார்த்தால் டெங்கு இல்லை என தெரிய வருகிறது. ஆனால் வேறு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

டெங்கு பாதிக்கப்படவர்கள் வருகின்றனர். மழைநீர் தேங்கி டெங்குவை உருவாக்குகிறது. அதனால் சுடுநீர் குடிக்க வேண்டும். சூடான ஆகாரங்களை எடுக்க வேண்டும். கொசு பாதிப்பில் இருந்து காத்து கொள்ள பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மற்றொரு மருத்துவர் கூறும்போது, தற்போது வரும் வைரஸ் காய்ச்சல் சாதாரணமானது தான். 3 நாட்களில் சரியாகி விடும். தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகமாக வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் போன்றவை இந்த அளவில் இருப்பது வழக்கம். பயப்படுகிற அளவிற்கு பாதிப்பு இல்லை. சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதால் கட்டுக்குள் உள்ளது. இது கொசு உற்பத்தி காலம். அதனால் மழைநீரை வீட்டை சுற்று தேங்காமல் பார்த்து கொண்டால் டெங்கு வராது. பருவமழை தொடங்கும் காலம் வரை கொசு உற்பத்தியை தீவிரமாக கண்காணித்து ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எவ்வித புதிய வைரஸ் பாதிப்பும் இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சல் நிலவுகிறது என்று கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!