செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்: முதன்மை அமர்வு நீதிபதி
அமைச்சர் செந்தில் பாலாஜி - கோப்புப்படம்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் மூத்த வக்கீல் கோர்ட்டில் முறையிட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 120 பக்க குற்றப் பத்திரிகை நகல் மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை நேற்று முன்தினம் வழங்கியது.
அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் என்ற சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி அந்த மனுவை திரும்ப அனுப்பி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'என் மீது 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தபோதே அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். என் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இருதய அறுவை சிகிச்சை காரணமாக எனது உடல்நிலை மோசமாக உள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என கூறியிருப்பதாக அவரது தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, 'செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்' என்றும் முறையிட்டார்.
அதற்கு நீதிபதி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தனக்கு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டியது இருப்பதாகவும், ஜாமீன் மனுவுக்கு மனு எண் வழங்கப்பட்டு விசாரணைக்கு பட்டியலிடட்டும் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த ஜாமீன் மனு இன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu