பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 11,000 பேருந்துகள்
கோப்புப்படம்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. சென்னையில் பணியில் இருப்போர் , கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் இந்த ஆண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பல இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் நாளை 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது.
- பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
- புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகிறது.
- திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
- ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
- விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களை சேர்ந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
- திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
டிசம்பர் 12-ந்தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம்.
நாளை முதல் 14ம் தேதி வரை அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய வசதிவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வருகிற 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்பு பேருந்துகளும், மற்ற நகரங்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu