தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

பைல் படம்.

சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறையும் சேர்ந்து வருவதால் சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு

தொழில் மற்றும் வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து பலர் சென்னை, கோவை, பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களில் வசிக்கின்றனர். பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாள்களிலும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தொடர் விடுமுறை வந்தால் பேருந்து மற்றும் ரயில்களில் இடம் கிடைப்பது என்பது அரிதாக உள்ளது.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் முடிந்துவிடுவதால் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாள்களுக்கான டிக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்பே விற்பனையாகிவிட்டன.

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை எழும்பூர்-நெல்லை, நெல்லை-தாம்பரம், சென்னை சென்ட்ரல் - மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இன்று( அக்டோபர் 20ஆம் தேதி) இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் (வண்டி எண்.06043) புறப்பட்டு நாளை (21ஆம் தேதி) காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மறுமார்க்கமாக வரும் அக்டோபர் 24ஆம் தேதி நெல்லையிலிருந்து மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் (06044) புறப்பட்டு அக்டோபர் 25 காலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு இன்று (அக்டோபர் 20) இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (06047) புறப்பட்டு நாளை (அக்டோபர் 21) மாலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து நாளை (அக்டோபர் 21) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06048) புறப்பட்டு நாளை மறுநாள் (அக்டோபர் 22) காலை 11.20 மணிக்கு சென்ர்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!