அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை
பைல் படம்.
சமீபத்தில் வெளியான 'ஜெய்பீம் ' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யாவை பாட்டாளி மக்கள் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை மனு அளித்துள்ளது.
அதில், நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் OTT தளத்தில் வெளியான 'ஜெய் பீம்" திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள்.
எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார். அந்த முத்திரையை படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கோ படத்தின் கதாநாயகன் திரு சூர்யாவிற்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில், உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் அவரை பற்றி விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu