பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: எளிமையான முறையில் கொண்டாட்டம்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா, பக்தர்களுக்கு அனுமதியின்றி எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் புகழ் பெற்ற அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழர்களின் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகருக்கு இன்று சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படும் நிலையில், கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
கற்பக விநாயகர் கோவில் குடைவரைக் கோவிலாக அமைந்துள்ளதும், மூலவர் கற்பக விநாயகர் வடக்கு புறமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவதும் இக்கோவிலின் சிறப்பு அம்சமாகும். ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா பிள்ளையார்பட்டியில் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஆனால், கொரானா பரவல் காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, இரண்டாவது ஆண்டாக எளிமையான முறையில், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி கோவில் நிர்வாகிகள், மற்றும் அறங்காவலர்கள், குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொள்ள கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
6ம் நாள் நிகழ்வாக கஜமுக சூரசம்கார நிகழ்ச்சி மட்டும் எளிமையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், சந்தன காப்பு அலங்காரம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது. கோவிலின் தலைமை குருக்களான பிச்சை குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், அறங்காவலர்கள்,மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகரை தரிசித்து வருகின்றனர்.
காலை 10 மணி அளவில் மிக முக்கிய நிகழ்வான, அங்குச தேவருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர், கோவில் பிராகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இன்று எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. போலீசால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சியை அடுத்து மதியம் 1 மணி அளவில் 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத முக்கூரணி கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா நிறைவு பெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu