மதுரையில் அரசுபேருந்து நடத்துனர் திருப்பத்தூர் பயணியை ஏற்ற மறுத்ததால் முற்றுகை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மதுரையில் அரசு பேருந்து நடத்துனர் திருப்புத்தூர் செல்லும் பயணியை ஏற்ற மறுத்ததைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அய்யாதுரை சந்து பகுதியில் வசித்து வரும் ஜமால் முகமது என்பவரது மகன் சிக்கந்தர் தனது குடும்பத்தினருடன் மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் திருப்பத்தூர் செல்வதற்காக ஏறியுள்ளார். அப்பொழுது பேருந்து நடத்துனர் திருப்பத்தூர் பயணிகளை ஏற்ற முடியாது என கூறியதாகவும், காரணம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது .
இதுகுறித்து சிக்கந்தர் திருப்பத்தூரில் தகவல் தெரிவித்ததன் பேரில், திருப்பத்தூரில் பொதுமக்கள் ஒன்றிணைந்து திருப்பத்தூர் காவல் நிலையம் முன்பு தஞ்சாவூர் செல்லும் பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிக்கந்தர் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துனர் குமரன் மீது புகார் மனு கொடுத்துள்ளார்.
பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு பேருந்து நடத்துனர் பொதுமக்களை அலைகழிப்பு செய்யும் அவலம் ஏற்பட்டதால் திருப்புத்தூர் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னர் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு தனியார் பேருந்தில் வருவது மறுக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் பல போராட்டங்கள் மேற்கொண்டபின்னர், தற்போது அது மாதிரியான பிரச்னைகள் ஏதும் இல்லாமவ் இருந்து வந்த நிலையில், அரசு பேருந்து நடத்துனர் இதுபோன்று பொதுமக்களை அவமதிப்பது வேதனையான விஷயமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu