சிவகங்கை சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்பு

சிவகங்கை சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்பு
X

சிராவயல் மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளை.

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டிற்கு இணையாக பார்க்கப்படும் சிராவயல் மஞ்சுவிரட்டும் உலகப் புகழ் பெற்றதாக இருந்து வருவதோடு,50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் கூடி, கண்டு களிக்கக் கூடிய வசதியுடன், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த மைதானத்தில் தொழுவம் அமைத்து சிராவயல் மஞ்சுவிரட்டு பிரம்மாண்டமான போட்டியாக நடத்தப்படும்.

தற்போதும், கொரோனா தொற்று மூன்றாம் கட்டமாக அதிகரித்து வருவதால்,தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ள நிலையில், வழக்கமாக தை மூன்றாம் நாள் நடத்தப்படும் சிராவயல் மஞ்சுவிரட்டு நேற்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் ஒருநாள் மாற்றியமைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.


மஞ்சுவிரட்டில் சுமார் 300 காளைகள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு இன்று போட்டியில் கலந்து கொண்டன.காளைகளை பிடிக்க 60 க்கும் மேற்பட்டவர்கள் களமிறங்கினர்.

சிவகங்கை மாவட்ட கால்நடை மருத்துவர் நாகராஜ் தலைமையில், மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான மாடுகள் மஞ்சுவிரட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.அதேபோல்,இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், காயம் அடைந்த வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிகிச்சையளிக்க 4 பேர் கொண்ட 6மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

மதியம் 12.30 மணி அளவில் சிராவயல் மஞ்சுவிரட்டு விழாக் குழுவினர்கள் பாரம்பரிய வழக்கப்படி கோவிலில் விசேஷ பூஜைகளுக்கு பிறகு முதலாவதாக தொழுவத்தில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

இப்போட்டியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராமத்தைச் சுற்றி12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1000 க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மஞ்சுவிரட்டின் போது, கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் காளைகள் கூட்டத்திற்கிடையே சீறிப் பாய்ந்து முட்டியதில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில் 16 பேர் படுகாயமடைந்த நிலையில், திருப்பத்தூர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!