அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு: காவல் ஆய்வாளர் காயம்- 5 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு: காவல் ஆய்வாளர் காயம்- 5 பேர் மீது வழக்கு

சிவகங்கைமாவட்டம், காரைக்குடி அருகே தடையைமீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு

சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டன

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்வின்போது, ஜல்லிக்கட்டு காளை முட்டியதியில் காவல் ஆய்வாளர் காயமடைந்தது தொடர்பாக போலீஸார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா கட்டுபாடுகளால் காவல்துறை மஞ்சு விரட்டுக்கு அனுமதி வழங்கவில்லை. எனினும், மஞ்சு விரட்டு குழு இளைஞர்கள் வாட்ஸ்ஆப் வாயிலாக மஞ்சு விரட்டு குறித்து தகவல்களை பரிமாறினர். இதைத்தொடர்ந்து, சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் வாகனங்களில் கொண்டுவந்து வடக்கு நடுவிக்கோட்டை கண்மாய் ,வயல்வெளி பகுதிகளில் காளைகள் அவிழ்த்து விடப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் மஞ்சு விரட்டு காளைகளுடன் வந்தவர்களை அப்பகுதியை விட்டு வெளியேற எச்சரித்தார். அப்பொழுது அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று எதிர்பாராதவிதமாக ஆய்வாளர் சுந்தர மகாலிங்கத்தை தொடை பகுதியில் குத்தி தூக்கி வீசிவிட்டு சென்றது. இதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு குறித்து என். மேலையூர் கிராமநிர்வாக அலுவலர் கணேஷ் கிருஷ்ணகுமார், நாச்சியாபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story