வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கத்திற்காக வந்த வெளிநாட்டுப் பறவைகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வேட்டங்குடியில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கத்துக்காக தங்கியுள்ள வெளிநாட்டுப் பறவைகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள் கூடுகள் அமைத்து குஞ்சுகள் பொறித்துள்ளன.
திருப்பத்தூர் அருகே கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் சுமார் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. மழை காலம் தொடங்கியவுடன் இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகை தந்து குஞ்சுகளுடன் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்று விடுவது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டில் நல்ல மழை பெய்து வருவதாலும், கண்மாயில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதாலும் தற்போது உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பறவைகள் அதிகளவில் வரவில்லை. வந்த பறவைகளும் கூடு கட்டாமல் டிசம்பா் மாதத்திலேயே இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றன. ஆனால் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய் முழுவதும் தண்ணீருடன், சரணாலயம் பசுமையாக இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சரணாலயம் திருப்பத்தூர் - மதுரை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதைக்கண்டு ரசிக்க வர விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் வருகை குறைவாகவே உள்ளது. பறவைகள் குஞ்சுகளுடன் இருக்கும் அழகை ரசிக்க, அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு வனத்துரையினர் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu