திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதமாகியும் திட்டம் பூஜ்யம்: ஆர் பி உதயகுமார் பேச்சு
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்
திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதமாகியும் அவர்கள் செய்திருக்கும் திட்டம் பூஜ்யமாக தான் உள்ளது, ஜல்லிக்கட்டு உரிமைகளை மீட்டு எடுத்தது அதிமுக அரசுதான் என்றார் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு.
சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட அதிமுக தேர்தல் ஆணையாளர் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் வி உதயகுமார் கழகத் தேர்தல் குறித்த ஆலோசனை வழங்கி பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஏழு மாதங்கள் ஆகியும் மக்களுக்கு பயன்படுகின்ற எந்த ஒரு திட்டமும் செயல்படாமல் பூஜ்ஜியமாக தான் இருந்து வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசுதான். அதிமுக அரசில் எடப்பாடியார்- ஓபிஎஸ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போது வரை பெயர்களை மாற்றி வருகிறார்கள்.
அம்மா மினி கிளினிக்கை திடீரென்று எடுத்துவிட்டு அதற்கு வேறு பெயர்கள் சூட்டினார்கள். அதேபோல் அம்மா வளாகத்தில் திடீரென்று பேராசிரியர் அன்பழகன் பெயரை ஒரு அறைக்கு சூட்டுகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் அன்பழகன் புகழ் நிலைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், நந்தன வளாகத்தில் எவ்வளவு இடம் இருந்தும் எவ்வளவு பெரிய மைதானம் இருந்தும் அவர் பெயரை சூட்டாமல், நம்முடைய தலைவி அம்மா பெயர் சூட்டியுள்ள வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பெயரை வைக்கிறார் என்றால் அம்மாவை மட்டும் ஸ்டாலின் வெறுக்கவில்லை. பேராசிரியர் அன்பழகனையும் முதல்வர் வெறுக்கிறார் என்பது இந்தப் பெயர் சூட்டு விழாவின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு தெரிகிறது.
ஆகவே முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தனது தந்தையார் பெயரைத் தவிர வேறு யாரு பெயரும் இந்தத் தாய்த் திருநாட்டில் நிலைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் தான் அந்த பெயர் சூட்டு விழா நடந்ததாக முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ நாகராஜன், ஆவின் சேர்மன் அசோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu