உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த சீரழிவுகள் சரி செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன்
கடந்த ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் சீரமைப்பு என்ற பெயரில் நடந்த சீரழிவுகள் தேர்தலுக்கு முன் சரி செய்யப்படும் என்றார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
வன்கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், சட்டம், மனரீதியான ஆலோசனைகளை பெறவும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் ரூ.48 லட்சத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டது. இதனை, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் கே.ஆர்பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ.1 கோடிக்கு மேல் வருமானமுள்ள ஊராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து பரிசீலித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தல் நடத்தப்படும். கடந்த கால ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் சீரமைப்பு என்ற பெயரில் சீரழிவுகள் நடந்துள்ளன.
வார்டுகள் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சீர்செய்யப்பட்டு, நகர்புறங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். மேலும், கடந்த காலங்களில் ஊராட்சிகள் நிதியை செலவிட்டதில், சில குளறுபடிகள் இருந்தது உண்மை தான். ஊராட்சி நிதிகளை மடைமாற்றமும் செய்துள்ளனர். நாங்கள் பொறுப்பேற்றதில் இருந்து எந்தவித தவறும் நடக்கவில்லை. ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்பட்டு வருகிறது. கடந்தகால தவறுகளுக்கு விசாரணை நடந்து வருகிறது என்றார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.
இதில், மாவட்ட சமூகநல அலுவலர் அன்புகுளோரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, சிவகங்கை, திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் புதிதாக 4 வழித்தடங்களில் அரசு பேருந்துகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்வில், போக்குவரத்துக்கழ கோட்ட மேலாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu