மானாமதுரை அருகே கண்மாய் கலுங்கு ஓடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பொக்லைன் இயந்திரம் மூலம் கலுங்கு ஓடையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கண்மாயில் கலுங்கு ஓடையிலிருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்றது. திருப்புவனம் வட்டம் திருப்பாச்சேத்தி பெரிய கண்மாய் கதவணை சேதமடைந்ததால். அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தல், மானாமதுரை வட்டம் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களின் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் முளைத்து வந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட திருப்பாச்சேத்தி பெரியகண்மாய் அடையா மடை பகுதியில், வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் மணல் முட்டைகளை அடுக்கி தண்ணீர் புகாமல் அடைக்கப்பட்டது.
தொடர்ந்து செம்பராயனேந்தல் கண்மாய் கலுங்கு ஓடை பகுதி ஆக்கிரமிப்பு காரணமாக விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது தெரியவந்தது . இந்நிலையில் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் , மாளாமதுரை வட்டாட்சியர் தமிழரசன், திருப்புவனம் வட்டாட்சியர் ரத்தினவேல் பாண்டியன், இரு வட்டங்களைச் சேர்ந்த நில அளவையாளர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் இணைந்து மானாமதுரை அருகே செம்பராயனேந்தல் கண்மாய் கலுங்கு ஓடையிலிருந்த ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர்
பின்னர் ஆக்கிரமிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கலுங்கு ஓடையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு , தூர்வாரும் பணி நடைபெற்றது.
இது குறித்து மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் கூறுகையில், செம்பராயனேந்தல் கண்மாயின் கலுங்கு ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெறுவதால் மழவராயனேந்தல் மற்றும் செம்பராயனேந்தல் ஆயக்கட்டு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் வடியத் தொடங்கிவிடும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu