பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகனங்களுடன் முற்றுகையிட்ட லாரி டிரைவர்கள்
மானாமதுரையில் பெட்ரோல் பங்க் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் லாரிகளை குறுக்கே நிறுத்தி பெட்ரோல் விற்பனை செய்ய விடாமல் முற்றுகையிட்ட லாரி டிரைவர்கள்
பெட்ரோல் பங்கில் விற்பனையை லாரி ஓட்டுநர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பெட்ரோல் பங்க் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் லாரிகளை குறுக்கே நிறுத்தி பெட்ரோல் விற்பனை செய்ய விடாமல் லாரி டிரைவர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை பைபாஸ் ரோட்டில் செல்லப்பாண்டி என்பவருக்கு சொந்தமான எஸ்ஸார் குழும பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராம லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடத்தில் லாரிகளை நிறுத்துவது வழக்கம், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விற்பனை மையத்தில் இன்ஜின் ஆயில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக லாரி டிரைவர்கள் தகராறு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வளநாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட சிலர் லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை லாரிகளை வெளியே எடுக்க விடாமல் செல்லப்பாண்டி குழி தோண்டியுள்ளார். தகவலறிந்து வந்த மற்ற லாரி டிரைவர்கள் கேட்டதற்கு, செல்லப்பாண்டி எனது இடம் அப்படித்தான் தோண்டுவேன் என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள் தங்கள் மற்ற லாரிகள், டூவீலர்கள் உள்ளிட்டவற்றை பெட்ரோல் விற்பனை நிலைய நுழை வாயில் முன் நிறுத்தி விட்டனர். இதனால் பெட்ரோல் ,டீசல் விற்பனை நடைபெறவில்லை. இதன் பின் போலீசார் வந்து இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். சுமார் இரண்டு மணி நேரமாக பெட்ரோல் , டீசல் விற்பனை பாதிக்கப்பட்டது, வேறு வழியின்றி நில உரிமையாளர் செல்லப்பாண்டி குழியை சரி செய்தபின் லாரிகள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன. இச்சம்பவத்தால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu