மாெஹரம் பண்டிகை காெண்டாடிய இந்துக்கள்; அசத்தும் மதநல்லிணக்க கிராமம்

முதுவன் திடலில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அக்கிராமத்தினர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் இந்துக்கள் மொகரம் பண்டிகையைக் கொண்டாடி தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
முதுவன் திடல் கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் ஒருவர் அங்கு சிறப்பாக வாழ்ந்து வந்தாகவும், அவர் இறந்த பின் முதுவன் திடல் கிராமத்தில் மையப் பகுதியில் அவருக்கு தர்கா, பள்ளிவாசல் அமைத்து தெய்வமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நாளடைவில் முஸ்லிம்கள் குடிபெயர்ந்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டதால், தற்போது இந்துக்கள் அதிகளவில் வாசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகை அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் 10 நாட்கள் விழா கொண்டாடுவது வழக்கம்.
இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், விவசாயம் செய்து அறுவடை செய்த பின்னர் பாத்திமா நாச்சியாருக்கு படையல் செய்வது இந்த கிராம மக்களிடம் உள்ள வழக்கங்களாகும். நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் தீர்க்கமாக நம்புகின்றனர் இந்த கிராம மக்கள்.
இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை முதுவன் திடல் கிராமத்தில் கடந்த 11-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மொஹரம் 5-வது நாள் நேர்த்திக்கடன் நிகழ்ச்சியும், 7வது நாள் தர்காவில் சப்பர பவனியும் நடைபெற்றன.
இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை மொஹரம் பண்டிகை கொண்டப்பட்டது. இதனையொட்டி 10 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு பூக்குழி அமைக்கப்பட்டு, காப்புக் கட்டி, விரதம் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து அதிகாலை 4.20 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூ மொழுகுதல்
இதனையடுத்து, பூ மொழுகுதல் என்ற தீ கங்கு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் தங்கள் தலையில் சேலையாள் மூடியபடி பூக்குழி முன்பு அமர்ந்து, பின்னர் தம் தலையை ஈரத்துணியால் போர்த்தி, அதற்குமேல் மூன்று முறை தீ கங்குகளை எடுத்துப் போட்டு விடுவார்கள். அதன் பின்னர், திருவிழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொது மக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவிற்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். இன்று நடந்த இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் கூடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu