சிவகங்கை மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் புகுந்த குரங்குகளால் பரபரப்பு
சிவகங்கை மாவட்ட குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது கோரிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்குவார்கள். இங்கு வழங்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான திங்கள் கிழமை தோறும் குவிவது வழக்கம்.
வழக்கம் போல் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டு இருந்த வேளையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரங்களில் சுற்றித்திரிந்த குரங்குகள் திடீரென குறை தீர்க்கும் கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பொதுமக்களின் உதவியுடன் குரங்குகளை விரட்டி அடித்தனர். குரங்குகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்ததாக பொதுமக்கள் நகைப்புடன் பேசிக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu