உரத்தட்டுப்பாடு: மானாமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் உரம் விற்பனை...!

உரத்தட்டுப்பாடு: மானாமதுரையில்   போலீஸ் பாதுகாப்புடன்  உரம்  விற்பனை...!
X

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ்பாதுகாப்புடன் நடைபெற்ற உர விற்பனை

கூட்டுறவு சங்கங்களிலும் தனியார் விற்பனை கடைகளிலும் உரம் போதுமான அளவிற்கு வழங்காததால் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது

மானாமதுரையில் உரம் வாங்க இரவில் கடை முன் திரண்ட விவசாயிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் உரங்கள் விற்பனை செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உரத் தட்டுப்பாடு நிலவுவதால் ஞாயிற்றுக்கிழமை இரவு உரக்கடை முன்பு விவசாயிகள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்புடன் உரம் விற்பனை செய்யப்பட்டது. மானாமதுரை உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்ததால் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

பல கிராமங்களில் நெல் நாற்று நடவு செய்யப்பட்டு விட்டது. சில விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து நாற்று வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு உரம் தேவைப்படுகிறது. ஆனால் கூட்டுறவு சங்கங்களிலும் தனியார் விற்பனை கடைகளிலும் உரம் போதுமான அளவிற்கு வழங்கப்படாததால் இப்பகுதிகளில் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மானாமதுரையில் தனியார் உர விற்பனை கடைகளில் அவ்வப்போது வந்து இறங்கும் உரங்களை வாங்குவதற்கு விவசாயிகள் அதிகாலையிலேயே கடைகளுக்கு முன்பு காத்துக் கிடக்கின்றனர்.



கடந்த மூன்று நாட்களாக மானாமதுரையில் உரம் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதற்கிடையில் மானாமதுரையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் உர விற்பனை கடையில் உரம் மூடைகள் வந்து இறங்குவதாக கிடைத்த தகவலையடுத்து மானாமதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடை முன்பு திரண்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த கடைக்கு முன்பு வந்து கூட்டமாக நின்ற விவசாயிகளை வரிசையாக நிற்க வைத்து உரம் வாங்க ஏற்பாடு செய்தனர். இதனால் நீண்ட வரிசையில் உரம் விவசாயிகள் காத்துக் கிடந்தனர். அதன்பின்னர் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிப்பிட்ட அளவில் உரம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விற்பனை தொடங்கி சில மணி நேரத்திலேயே உர மூடைகள் தீர்ந்து விட்டதால் பல விவசாயிகள் உரம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழக அரசு உரத்தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!