கீழடியில் மதில் சுவர், இறுதிச் சடங்கு மண்பாண்டங்கள் கண்டுபிடிப்பு
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள்.
கீழடி 7ம் கட்ட அகழாய்வில், அகரம் தளத்தில் செங்கல் கட்டுமான மதில் சுவரும், மற்றொரு கொந்தகை தளத்தில் இறுதிச் சடங்குக்கு பயன்படுத்திய மண்பாண்டங்கள் கண்டுபிடித்துள்ளன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 6கட்ட அகழாய்வு நடந்து முடிந்துள்ளன.
தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அகரம் அகழாய்வு தளத்தில் ஒரு குழியில் 1அடி ஆழத்தில் மேற்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமான மதில் சுவர் பார்ப்பதற்கு சுமார் 13 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கல்கள் அனைத்தும் 30 சென்டி மீட்டர் நீளமுள்ளவை . அக்காலத்தில் நம் முன்னோர்கள் கட்டுமானத்தையும் கட்டிடக் கலையையும் எடுத்து கூறும் விதமாக உள்ளது.
தொடர்ந்து இதை அகழாய்வுப செய்யும் பட்சத்தில் இதனுடைய முழுமையான நீளம் அதிகரிக்கக்கூடும். இதனையடுத்து, கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியும் அதனுள்ளே சடங்குக்கு வைக்கப்பட்டிருந்த கூம்பு, வட்ட, முக்கோணம் வடிவம் கொண்ட மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
பொதுவாக அக்காலத்தில் இறந்தால் நம் முன்னோர்கள் தாழியினுள் புதைப்பது வழக்கம். அதனுள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைப்பது வழக்கம். தற்போது கிடைத்துள்ள பொருட்கள் குறித்து காலம் மற்றும் பயன்பாடு குறித்தும் ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
தொடர்ந்து கீழடி, அகரம், மணலூர்,கொந்தகை பகுதியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu