கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு அறிவிப்பு: தொல்லியல், தமிழக ஆர்வலர்கள் மகிழ்ச்சி
பைல் படம்.
கீழடி அகழாய்வு கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதல் மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறையும், கடைசியாக நடந்த 4 கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறையும் மேற்கொண்டு வருகின்றன. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்த அகழாய்வு மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
இதன்மூலம் தமிழகர்களின் நகர நாகரீகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டது. மேலும் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
அதேபோல் கீழடியில் அகழாய்வு நடந்த இடத்திலேயே திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்க இடம் கையகப்படுத்துவது தொடர்பான பூர்வாங்க பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் நிலம் தர மறுத்த விவசாயிகள், பிறகு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி சமரசத்தை அடுத்து நிலம் தரம் ஒப்புக் கொண்டனர். ஆனால் இழப்பீட்டு தொகையையும் மட்டும் கூடுதலாக வழங்க வேண்டுமென கேட்டனர்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு கீழடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோதே, 8-ம் கட்ட அகழாய்வு தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடப்பாண்டில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் தொல்லியல் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu