கோயிலில் வழிபட அனுமதி மறுப்பது இழிவுபடுத்தும் செயல்: எச்.ராஜா கண்டனம்
காரைக்குடியில், பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, 64 வது பிறந்தாள் விழா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், பாஜகவினர் அணிவித்த மாலையை ஏற்றுக் கொண்ட எச். ராஜா, பின்னர் கேக் வெட்டி, கட்சியினருக்கு ஊட்டினர்.
பின்னர், எச்.ராஜா அளித்த பேட்டி: ஹிந்து சமுதாயத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடந்து வருகிறத். கேரளா போல ஹிந்து சிறுபான்மை மாநிலமாக, தமிழகம் மாறி விடக்கூடாது என்ற கவலையில், 7 ஆண்டுகளாக வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க, சமூக விரோத ரவுடிகளை கைது செய்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு திருமாவளவன் வன்னிஅரசு போன்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறையினர், ஜாதி பார்த்து ரவுடிகளை கைது செய்யவில்லை.
ருத்ர தாண்டவம் திரைப்படம், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். இதில், மதரீதியான தாக்குதல் யார்மீதும் இல்லை. ஒருவர் மதம் மாறிவிட்டால் பட்டியலின மக்கள் பெரும் சலுகைகளை பெற முடியாது என்பது சட்டம். இதற்கு முக்கியத்துவம் இப்படத்தில் உள்ளது.
செய்தியாளர் சந்திப்பில், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. அமைச்சர் வி கே சிங்கும் இதே வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால், அது வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை, தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் இருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காகவும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவன், இந்த எச். ராஜா தான்.
தமிழகத்தில் குழந்தைகள் பூங்கா, தியேட்டர்கள், மால்கள் திறந்துள்ளன. இந்துக் கோயில்கள், குறிப்பிட்ட சில நாட்கள் வழிபட அனுமதி மறுப்பது என்பது, வேண்டுமென்றே பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை. தமிழக கோவில்களில் வழிபட தடை விதித்துள்ளதற்கு மக்களும் மகேசனும் தண்டனை வழங்குவர். கோவில்கள் வழிபட தடை அறிவிப்பை கைவிட வேண்டும். உடனடியாக எல்லா நாட்களிலும் கோவில்கள் வழிபட திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu