வருமானவரி பிடித்தத்தில் இருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

வருமானவரி பிடித்தத்தில் இருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
X

சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின்  (நடவடிக்கை குழு) சார்பில்  ஓய்வூதியர் தினவிழா நடைபெற்றது.

வருமானவரி பிடித்தத்தில் இருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை சிவகங்கை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) சார்பில் சிவகங்கை வட்டக்கிளை சார்பாக ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. சிவகங்கை உழவர் சந்தை அருகில் உள்ள ஒயிட் ஹால் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட துணைத் தலைவர் மணி, மாவட்ட இணை செயலாளர் முருகன் ,வட்டகிளை துணைத்தலைவர் எஸ். எஸ். மணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 70 வயது நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டனர். இந்த விழாவில் மாநில பொதுச் செயலாளர் துரைக்கண்ணு, மாநில குழு உறுப்பினர் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் அருள் ஜோஸ், மாவட்ட கவுரவத் தலைவர் கோவிந்த ராமானுஜம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஏழாவது ஊதிய குழுவில் வழங்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். 80 வயதில் வழங்கக்கூடிய 20 சதவீத பணப்பலனுக்கு பதிலாக 70 வயதில் 20 சதவீதமும் ,75 வயதில் 40 சதவீதமும், 80 வயதில் அறுபது சதவீதமும், 85 வயதில் 80 சதவீதமும், 90 வயதில் 100 சதவீதமும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வது. மிகக் குறைவாக ஓய்வூதியம் பெறும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள், வனத்துறை பணியாளர்கள் மற்றும் வாரியங்களின் மூலமாக பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வது.

மத்திய அரசினால் அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப் படியை உரிய நேரத்தில் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சி.பி.எஸ். மூலமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை இரட்டிப்பாக உடனடியாக வழங்க வேண்டும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையை மீண்டும் உடன் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வது. மருத்துவ காப்பீட்டு அட்டை விடுபட்ட அனைத்து பிரிவினருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். உள்ளாட்சி தணிக்கை துறை மூலமாக ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவ வசதி வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் இயற்கை எய்தினால் குடும்ப பாதுகாப்பு நிதியாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். கம்முடேஷன் பிடித்தல் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தி கேட்டுக் கொள்வது. ஓய்வூதியர்களுக்கு வருமானவரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story