கண்மாயில் குளித்த 2 சிறுவர்கள், 1 சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்மாயில் குளிக்க சென்ற 3 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் மற்றும் பழனிச்சாமி குடும்பத்தினர். இவர்கள் கருவேல மரங்களை வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரது குழந்தைகளான புனிதவதி (12) யோகேஸ்வரன் (8) இன்பத்தமிழன் (11)ஆகியோரை அழைத்து கொண்டு தேவகோட்டை அருகே பூங்குடி கிராமத்திற்கு கண்மாயை சுற்றியுள்ள கருவேல மரங்களை வெட்டும் பணிக்காக வந்துள்ளனர். பணி முடிந்து பெற்றோர்கள் வீட்டில் இருந்த நிலையில், குழந்தைகள் மூவரும் அருகிலுள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர்.

கண்மாயில் ஆழம் அதிகமாக இருந்த பகுதிக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் நீச்சல் தெரியாததால் சிறுவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். குளிக்கச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் தேடிச்சென்ற பெற்றோர்களும் குழந்தைகளை கண்டு பிடிக்க இயலாமல் போகவே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி தேடிய நிலையில் குழந்தைகள் நீரில் மூழ்கி சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. உயிரிழந்த குழந்தைகளின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தேவகோட்டை காவல்துறையினர் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business