50 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்கதிர் நீரில் மூழ்கி முற்றிலும் சேதம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்கதிர்கள் நீரில் மூழ்கிய நிலையில் 15 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமானது. இது விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் உதாரப்புலி. இங்குள்ள மக்களுக்கு பெரும்பாலும் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக வறட்சி நிலவியதன் காரணமாக விவசாயம் பொய்த்துபோன நிலையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனை கண்டு இந்த ஆண்டாவது விவசாய பணிகளை மேற்கொள்ள எண்ணிய இக்கிராம மக்கள் சுமார் 100 ஏக்கர் அளவில் விவசாய பணிகளை துவங்கி ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம்வரை செலவு செய்து உழவு, விதைப்பு, களையெடுப்பு பணிகளை செய்து முடித்து பயிர் விடும் நிலையில் இருந்தது.

இந்நிலையில் திடிரென மீண்டும் பெய்த கனமழையால் வயல்வெளி முழுவதும் தண்ணீரில் மூழ்கின. இதில் மேடான பகுதிகளில் தண்ணீர் வடிந்த நிலையில் ஓரளவு காப்பாற்றப்பட்டது. ஆனால் சுமார் 50 ஏக்கர் அளவில் நடப்பட்ட நெல்பயிர்கள் நீர் வடிய வழியில்லாமல் தண்ணீரிலேயே மிதக்கின்றன. மேலும் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் முலைவிட்ட நிலையில் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகி வீணாகியுள்ளது.

மேலும் தண்ணீர் வடியாத நிலையில் சுமார் 50 ஏக்கர் அளவிலான நெல்கதிரை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டாவது விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையில் அரசு ஏதேனும் உதவ வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Next Story