மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

தவறான தகவல் அளித்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு கால்வாயின் கடைமடை பகுதியாக இருப்பது சிவகங்கை மாவட்டம். இந்த கால்வாயின் நீடிப்பு பகுதியின் மூலம் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகின்றன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விடுத்த அறிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் பாசன வசதி இல்லை என்றும் ஏற்கனவே 70 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த கால்வாய் மூலம் முதலாவதாக தண்ணீர் பெறும் திருமலை கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வராத நிலையில் அங்கு சென்ற விவசாயிகள் தவறான தகவல்களை அளித்த ஆட்சியரை கண்டித்து கண்மாய்க்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தவறான அறிக்கையை ஆட்சியரிடம் வழங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். மேலும் வருகிற 7 ஆம் தேதி இந்த கால்வாய் மூலம் பாசன வசதிபெறும் 5 ஆயிரம் விவசாயிகளை திரட்டி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாகவும் அறிவித்ததுள்ளனர்.

விவசாயிகள், ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரை இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், முன்னதாக தவறான தகவலை அளித்த ஆட்சியர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறக்க வேண்டும், நடவு செய்த நெற்பயிரை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story