பொங்கலுக்கு மண் அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் வேதனை

பொங்கலுக்கு மண் அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம்  தொழிலாளர்கள் வேதனை
X

பொங்கலுக்கு மண் அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் மொத்த வியாபாரம் இல்லாததால் போதுமான வருமானம் இல்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி அருகேவுள்ள கூலிப்பட்டி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பானை, மண் குடுவை, மண் குதிரை, கார்த்திகை விளக்குகள், மற்றும் பொங்கல் பானை, பொங்கல் அடுப்பு உள்ளிட்டவைகளை செய்து விற்பனை செய்து அதன் மூலம் வரும் வருவாயை வைத்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் உள்ளதால் பெரும் அளவில் வருமானம் இழந்துள்ள இந்த மக்கள் தற்சமயம் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்பு தயார் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒற்றை அடுப்பு, கொடி அடுப்பு என இருவகை அடுப்புகளை தயார் செய்து வரும் நிலையில் ஒற்றை அடுப்பு 100 ரூபாய்க்கும் கொடி அடுப்பு 300 முதல் 400 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் நாள் ஒன்றிற்கு ஒற்றை அடுப்பு 10 என்கிற எண்ணிக்கையிலும் கொடி அடுப்பு 3 முதல் 5 வரையிலும் தயார் செய்த போதிலும் மொத்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்லாததாலும் தாங்களே வாகனங்களில் எடுத்து சென்று விற்பனையில் ஈடுபடுவதால் போதுமான வருமானம் வருவதில்லை என்றும் மானாமதுரை போன்ற பெயரளவில் விளம்பரமான பகுதிக்கு செல்லும் மொத்த வியாபாரிகள் தங்கள் கிராமம் போன்ற சிறு கிராமங்களை நாடி வருவதில்லை என்றும் அதனால் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள். மேலும் எங்களை போன்ற சிறு கிராமங்களையும் மொத்த வியாபாரிகள் நாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!