சிறுவாணி குடிநீர்த் திட்டம்: கேரள அரசுக்கு தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் கேரள அரசுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (1-2- 2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், கோயம்புத்தூர் நகருக்கு தண்ணீர் வழங்கவேண்டிய முக்கிய ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது என்றும், தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான மொத்த நீர்த் தேவையான 265 மில்லியன் லிட்டரில், 101.4 மில்லியன் லிட்டர். சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, ஆயினும் கடந்த ஆறு ஆண்டுகளில், கேரள அரசு 0.484 டி.எம்.சி.- யிலிருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் தண்ணீரை வழங்கியுள்ளது என்று புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவிற்கு மழை பெய்துள்ளபோதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, முழு நீர்த்தேக்க மட்டத்திற்கு பதிலாக, இருப்பு நிலையைக் குறைத்துப் பராமரிக்கிறது என்பது தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அணையின் நீர் மட்டம் குறைவதால், இத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில்தான் தண்ணீரை வழங்க முடிகிறது என்றும் முதலமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்கம் வரை நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரையும் அணுகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்க மட்டம் வரை, சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முழு கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அடுத்த கோடைகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 03.01.2022 முதல் நீர்வரத்து வரும் வால்வ்-4-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சூழ்நிலையில், கேரள அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த வால்வ்-4-ன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கேரள நீர்ப்பாசனத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டத்தின் பிற பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில், எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், மேலும், 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu