தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை மூடு: அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை
டாஸ்மாக் நிர்வாகம் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை (Automatic Liquor Vending Machine) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரம் ஏடிஎம் இயந்திரத்தைப்போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, பணம் செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொள்ளும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்தானியங்கி மது விற்னை இயந்திரத்தை மூடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களை வைத்தால் திமுகவிற்கு மோசமான பெயர் தான் வரும். தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அரசு மூட வேண்டும் என்று கூறிய அவர், மூடாவிட்டால் பாமக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 27ம் தேதி திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டியில், தமிழக அமைச்சரை பொருத்தவரை மதுபான விற்பனையை வைத்துதான் தமிழக வளர்ச்சியடையவதாக அவர் கூறுகிறார். எங்களை பொறுத்தவரை தமிழகத்துக்கு இது ஒரு அவமானம். தமிழகம் முன்னேற டாஸ்மாக்கை மூட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் முதல் நாள் முதல் கையெழுத்து மது கடையை மூடுவோம் என்றார்கள். மூடினார்களா? தமிழ்நா ட்டில் 3 கோடி பட்டதாரி இளைஞர்களுக்கு மேல் வேலை இல்லை. தமிழகத்தை எங்களிடம் 5 ஆண்டுகள் மட்டும் கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு இழுத்து செல்ல எனக்கு போதிய அனுபவம் உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க.வால் புதிதாக எதையும் கொடுக்க முடியாது.
தற்போது தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு அரசாணை வெளியிட்டார்கள். அதில் திருமண மண்டபங்கள், சர்வதேச மாநாடுகள், விளையாட்டு மைதானங்களில் மதுவை சப்ளை செய்யலாம் என்பதுதான். சென்னையில் பெரிய மதுபான கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம், என்ன மனநிலையில் இந்த அரசாணையை கொண்டு வந்தீர்கள். அதனை எதிர்த்து பா.ம.க. வழக்கு போட்டு தடை ஆணை பெற்றது. தி.மு.க.வின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையே பூரண மதுவிலக்கு தான். அதன் வழியில் வந்த தி.மு.க. பூரண மது விலக்கை அமல்படுத்த தயக்கம் காட்டுவது ஏன்? என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu