செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி தீர்ப்பு
![செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி தீர்ப்பு செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி தீர்ப்பு](https://www.nativenews.in/h-upload/2024/04/15/1890707-sent.webp)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில், செந்தில் பாலாஜியிடம் 67 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்? என செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்டவைகளில் இருந்து முப்பது கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. பணம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு வேலை வழங்கியது குற்றச் செயல் எனவும், வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதே நாளில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிய மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவில், 'இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் அமலக்காத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனு மீது நாளை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu