செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்

செந்தில் பாலாஜியை விசாரிப்பது  மிக மிக அவசியம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  வாதம்
X

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமலாக்கத்துறை வாதம்.

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த இயலவில்லை.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டெல்லி உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. கடந்த சில தினங்களாக இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். மற்றொரு மூத்த வக்கீல் முகில் ரோத்தகி நேற்று ஆஜராகி வாதாடினார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

துஷார் மேத்தா தனது வாதத்தில் மருத்துவமனை, நீதிமன்ற காவலில் உள்ள காலத்தை விசாரணை காலமாக கருதக்கூடாது . ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளன. வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தவிடாமல் அனைத்து வகையிலும் செந்தில்பாலாஜி தடுத்தார்.

வாக்குமூலங்களை பெற முயற்சித்தபோது செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் தான் செந்தில் பாலாஜியை கைது செய்தோம். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டிருந்தார் என்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. நீதிமன்ற காவலில் இருக்கும்போது ஒருவரை ஒப்படைக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை.

தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம். அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்