சென்னை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் அதிகரிப்பு

சென்னை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் அதிகரிப்பு
X

கடத்திவரப்பட்ட தங்கம்.

சென்னை விமானநிலையத்தில் அரபு நாடுகளிலிருந்து கடத்திவரப்படும் தங்கம் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 7ம் தேதி, அபுதாபியிலிருந்து வந்த ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த நபரின் பையையும், ஆடையையும் பரிசோதனை செய்ததில், ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ₹51.42 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோ எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்கம் மீட்கப்பட்டது. இதனையடுத்து தங்கத்தை கடத்தி வந்தவரை கைது செய்தனர்.

கடந்த 8ம் தேதி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மஸ்கட்டிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். 3 கிலோ கிராம் எடையுடைய 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 10ம் தேதி, துபாயில் இருந்து சென்னை வந்த 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த 300 கிராம் எடைகொண்ட 12 சிறிய தங்கக் கட்டிகள் மற்றும் 4967 கிராம் எடையிலான 6 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். 5.267 கிலோ கிராம் எடைகொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு 2.34 கோடி ரூபாயாகும்.

கடந்த 11ம் தேதி, அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் 3எல்-141 என்ற விமானத்தின் மூலம் சென்னை வந்த இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரிடம் ரகசிய தகவலின் அடிப்படையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் சோதனை மேற்கொண்ட போது, பசை வடிவில் 3 தங்க பொட்டலங்கள் அவரது உடலின் குடல் பகுதியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 724 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 12ம் தேதி, அபுதாபியில் இருந்து எத்திஹாட் ஏர்லைன்ஸ் இஒய்-268 விமானத்தில் இருந்து சென்னை வந்த இந்திய ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவரது உடமைகளிலிருந்து 1298 கிராம் எடை கொண்ட 4 தங்க பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பயணிகளிடமிருந்து மொத்தம் 2022 கிராம் எடை கொண்ட 89 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சுங்கச்சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்