மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
X
பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ, மனதளவில் துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படியும் பள்ளிக் கல்வி இயக்ககமும், தொடக்கக் கல்வி இயக்ககமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

இது தொடா்பாக, பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி குழந்தைகளின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.

  • பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
  • தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ள கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
  • உடல் ரீதியான தண்டனை தொடர்பான புகார்களை உடனடியாகத் தீர்ப்பதற்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில், உடல் ரீதியான துன்புறுத்தல் தண்டனையை அளிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளித் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை நிறுவுதல் வேண்டும்.

ஆர்டிஇ (RTE- Right to education) சட்டம் 2009- ன் விதிகளின்படி, உடல் ரீதியான தண்டனை, மனரீதியான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு என வகைப்படுத்தலாம்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி,

உடல் ரீதியான தண்டனை:

  • அடித்தல், உதைத்தல், கீறல், கிள்ளுதல், கடித்தல், முடியை இழுத்தல், அறைதல், குச்சி, ஷூ, சாக்பீஸ், டஸ்டர்கள், பெல்ட், சவுக்கை, மின்சார அதிர்ச்சி உள்ளிட்ட குழந்தைக்கு வலி, காயம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலாக இருந்தாலும் உடல் ரீதியான தண்டனையாக கருதப்படுகிறது.
  • குழந்தைகளை பெஞ்சில் நிற்க வைத்தல், நாற்காலி போன்ற நிலையில் நிற்க வைப்பது, தலையில் பள்ளிப் பையுடன் நிற்பது, கைகளால் காதுகளைப் பிடித்துக் கொண்டு மண்டியிடுவது போன்ற தண்டனைகள் அளிக்கக்கூடாது.
  • கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள், பேச்சுக் கோளாறு, திணறல் அல்லது பேச்சு உச்சரிப்புக் கோளாறு போன்ற வளர்ச்சிப் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளை கேலி செய்தல் கூடாது.

மன ரீதியான தண்டனை

  • மாணவர்களின் மன அல்லது உடல் நலனை பாதிக்கும் வகையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களிடையே நேர்மறையான நடத்தை மற்றும் மோதல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துவதற்காக பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் கல்வியை இணைத்தல்.
  • அனைத்து பள்ளி மேலாண்மை மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி உரிமையின் உணர்வைப் புரிந்துகொள்ள வழக்கமான பயிற்சித் திட்டங்களை நடத்த வேண்டும்.
  • இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாநில அரசாங்கத்தால் ஒரு பள்ளிக்கு அங்கீகாரம், ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) வழங்குவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக உடல் ரீதியான தண்டனைகள் இல்லாத சூழல் விதிக்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான தண்டனை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகளை எந்த வகையிலும் அடிக்க மாட்டோம் என்று ஆசிரியா்களிடம் பள்ளி நிா்வாகம் சாா்பில் உறுதிமொழி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!