புகையிலை பொருட்களுக்கான தடை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
உச்ச நீதிமன்றம்
உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவைச் சேர்ந்த புகையிலை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியம், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலை நிறுவனம் சார்பில், புகையிலை பொருட்கள் என்பது உணவு பொருள் இல்லை என்பதால், அது உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் வராது. ஏற்கனவே, புகையிலை பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பர தடை, விற்பனை ஒழுங்குமுறை, தயாரிப்பு வினியோகம்) சட்டம் 2003 கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில், குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. புகையிலை பயன்பாட்டினால் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டது. புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால், புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உச்சநீதிமன்ற தீர்ப்பில், புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதே தவிர, கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. எனவே, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதித்து ஆணையர் பிறப்பித்த அறிவிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டால், அது சட்டத்துக்கு எதிராக செயல்பட அனுமதித்து போல் ஆகிவிடும் என்று தெரிவித்து, புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும் உணவு பாதுகாப்பு ஆணையரின் அறிவிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே தொடரப்பட்ட குற்ற வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலை நிறுவனங்கள் சார்பில், புகையிலை பொருட்களை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில், மக்கள் நலன் கருதியே தடை ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த தடை உத்தரவு சரிதான் என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu