புதுப்பிக்கப்பட்ட சத்திரம் பஸ் நிலையம்: திறந்து வைத்தார் முதல்வர்
திறந்து வைக்கப்பட்ட திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு.
திருச்சியில் மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையம் என இரு பஸ் நிலையங்கள் உள்ளன. இதில் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி மாவட்டத்திற்குள் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் நகர பேருந்துகள் மற்றும் துறையூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட வழித்தடங்களை புறநகர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.28.24 கோடி செலவில் சத்திரம் பஸ் நிலையம் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், 11 கடைகள், பெண்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பகம், ஓய்வறை, கழிவறைகளும் கட்டப்பட்டன.
முதல் தளத்தில் 17 கடைகள், 5 உணவகங்கள், காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு மேம்படுத்தப்பட்ட சத்திரம் பஸ் நிலையம் தயார் நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று திருச்சி தாயனூர் கேர் கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு விழாவில், மேம்படுத்தப்பட்ட புதிய சத்திரம் பஸ் நிலையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு சத்திரம் பஸ் நிலையம் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன், தமிழக அரசு கொறடா கோவி. செழியன், அமைச்சர்கள் சக்கரபாணி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu