சென்னை புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர்
சென்னையின் புதிய காவல் ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1968ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவரான சந்தீப் ராய் ரத்தோர், குவைத்தில் பள்ளி படிப்பை முடித்தவர். வேலூர் இன்ஸ்டியூட்டில் பேரிடர் மேனேஜ்மெண்ட்டில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர்.
1992 ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபி.எஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பரமக்குடி மற்றும் நாகர்கோவில் மாவட்டத்தில் பணியை துவங்கினார். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகவும், அதன் பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பதவி வகித்தார்.
1998 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் துணை ஆணையராக சந்திப் ராய் ரத்தோர் இருந்தபோது கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தார். 1998 ஆம் ஆண்டு டெல்லி திகார் சிறையில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றினார்.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பதவி வகித்த போது முதல் முதலில் போக்குவரத்து LED சிக்னலை அறிமுகப்படுத்தினார். பின்னர் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான சிறப்பு காவல் படையில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றார்.
2003ம் ஆண்டு சிபிசிஐடியில் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக வழக்கை விசாரணை மேற்கொண்டார். 2005 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது அம்மாவட்ட காவல் துறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுக் கொடுத்தார்.
2015ம் ஆண்டு தேசிய பேரிடர் மீட்புக்கடை தலைவராக இருந்த போது கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளம், சென்னை முகலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்து உள்ளிட்ட பேரிடர்களை திறம்பட கையாண்டுள்ளார்.
2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழகத்தில் சிறப்பு அதிரடிப்படை தலைவராக இருந்த போது நக்சலைட்களுக்கு எதிரான முக்கோண எல்லைகளின் பாதுகாப்புக்காக வடிவமைத்து இருந்தார்.
2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்த போது அதிகப்படியான இளைஞர்களை காவல் துறையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் சென்னையில் இருந்து பிரிந்த ஆவடி காவல் ஆணையரகத்தின் காவல் ஆணையராக சந்திப் ராய் ரத்தோர் பதவி வகித்தார். அதன் பின்னர் டிஜிபி ஆக பதவி உயர்வு கிடைத்த சந்திப் ராய் ரத்தோர் ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் டிஜிபியாக பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையராக டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுள்ளார். மேலும், சைலேந்திர பாபு பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu