சேலம் மாவட்டத்தில் இன்று முதல் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாம்கள்
X
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் இன்று முதல் 20.08.2023 வரை நடைபெறவுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 1,541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் இன்று முதல் 20.08.2023 வரை நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

மகளிர் உரிமைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக, கடந்த 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற 846 மையங்களில் 4,04,449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற்ற 695 மையங்களில் 3,09,213 விண்ணப்பங்கள் என மொத்தம் 1,541 முகாம்கள் மூலம் 7,13,662 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 18.08.2023 முதல் 20.08.2023 வரை ஏற்கனவே நடைபெற்ற அதே 1,541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business