ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 35% மானியத்தில் வாகன கடனுதவிகள்
பைல் படம்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35% மானியத்துடன் வாகன கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் புதிதாக சுயதொழில் தொடங்க முதல் தலைமுறை தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் மாவட்டத் தொழில் மையம் அலுவலகம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூ.10 இலட்சத்துக்கு மேலும் ரூ.500 இலட்சத்தை மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. மானியம் திட்டத் தொகையில் 25%. பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75 இலட்சம். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனுற குறைந்த பட்சம் + 2 தேர்ச்சி / பட்டம் / பட்டயம் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21 க்கு குறையாதிருக்க வேண்டும். உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மட்டுமின்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் (பார்ட்னர்ஷிப்) அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். முதலீட்டாளர் பங்கு பொதுப் பிரிவினருக்கு திட்டத் தொகையில் 10% சிறப்புப் பிரிவினர் 5% செலுத்திடல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், சேவைப் பிரிவில், மண் அள்ளும் இயந்திரங்கள், காங்கிரீட் மிக்சர் வாகனம், ரிக் போரிங் வாகனம், ரெஃப்ரிஜரேட்டட் ட்ரக், டிப்பர் போன்ற நகரும் அலகுகளுக்கு மட்டுமே இது வரை இசைவளிக்கப்பட்டு வந்தது.
தற்போது தமிழக அரசு, இத்திட்டத்தின் கீழ் பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தோர் பெருமளவு பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, மேற்குறித்த பிரிவுகளைச் சார்ந்த பயனாளிகள் பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதான தொழில் தொடங்க அனுமதித்துள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், ட்ரைலெர் போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35% தனிநபர் மானியமும் கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3% வட்டி மானியமும் பெற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வங்கி கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மேற்கண்ட சலுகைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் துவங்கி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை நேரடியாகவோ அல்லது 0427 - 2448505, 2447878 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகியோ பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu