ஏற்காடு மலைப்பாதையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு

ஏற்காடு மலைப்பாதையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு
X

சேலம் - அரூர் சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

Salem News Today: சுற்றுலாப் பயணிகள் விபத்தில்லாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஏற்காடு மலைச்சாலையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Salem News Today: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சேலம் - அரூர் சாலையில் தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (02.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பகுதியாகும். குறிப்பாக, கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்துசெல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில்லாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சேலம் - அரூர் சாலையில் தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடந்து, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் குப்பனூர் – கொட்டச்சேடு வாழவந்தி சாலையில் குப்பனூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் ரூ.1.70 கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் சிறு மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினம் சாலை விபத்து ஏற்பட்ட கொட்டச்சேடு பெலாத்தூர் செல்லும் சாலையினை நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், சேலம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர் ஆய்வாக இன்றைய தினமும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாலை சந்திப்புகள், வளைவுகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெறிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றையதினம் ஏற்காடு மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் போன்ற சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் முனைவர் செ.துரை, மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா, துணைக் காவல் கண்காணிப்பாளர் (வாழப்பாடி) செல்வி தையல்நாயகி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், ஏற்காடு வருவாய் வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story