அரசு சி.என்.ஜி., பேருந்துகள் சோதனை ஓட்டம் வெற்றி: செலவு குறைந்ததால் மகிழ்ச்சி
சி.என்.ஜி., பேருந்து - கோப்புப்படம்
அரசு போக்குவரத்துக்கழக மொத்த செலவில், 27 சதவீதம் டீச-லுக்கு செலவிடப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., மற்றும் , எல்.என்.ஜி., மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி சென்னை மாநகர், சேலம், திருநெல்வேலி, கோவை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களில் தலா இரு பேருந்துகளில் சி.என்.ஜி.,யும், மாநகர், விழுப்புரம் கழகங்களில் தலா இரு பேருந்துகளில் எல்.என்.ஜி.,யும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேலம் கோட்டத்தில் இரு சி.என்.ஜி., பேருந்துகள் உள்பட ஏழு கோட்டங்களில், 14 பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டன.
கடந்த ஜூனில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் 1 முதல், 31 வரை, சி.என்.ஜி., மூலம் இயக்கப்பட்ட பேருந்துகளில் எரிபொருள் செலவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஏற்றபடி இதன் சேமிப்புத் தொகை மாறுபடும். சேலத்தில் சி.என்.ஜி மூலம் சேமிக்கப்பட்ட தொகை ரூ.2.08 லட்சம். இதேப்போல திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை, கோவை, விழுப்புரம் கோட்டங்களில் முறையே ரூ.1.58 லட்சம், ரூ.1.25 லட்சம், ரூ.1.58 லட்சம், ரூ.46,690, ரூ.68,064 என ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.7.65 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:சேலம் கோட்டத்தில் சேலம் - மதுரை தடத்தில், சி.என்.ஜி., இன்ஜின்களாக மாற்றப்பட்டு இரு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டீசல் மூலம் லிட்டருக்கு, 5.79 கி.மீ., இயக்கப்படுகிறது. அதில் ஒரு கி.மீ.,க்கு, 15.80 ரூபாய் செலவாகும். அதேபோல் சி.என்.ஜி., ஒரு கிலோவுக்கு, 7.08 கி.மீ., இயக்கப்படுகிறது. அதில் ஒரு கி.மீ.,க்கு, 11.24 ரூபாய் செலவாகும். இதை டீசலுடன் ஒப்பிடுகையில் கி.மீ.,க்கு, 2.61 முதல், 6.45 ரூபாய் செலவு குறைகிறது. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை, 93 ரூபாய்; சி.என்.ஜி., ஒரு கிலோ, 79 ரூபாய். இதிலும் டீசலை விட. சி.என்.ஜி., விலை குறைவு.
ஆகஸ்டில் சேலம் - மதுரை தடத்தில் தினமும், 750 கி.மீ., என, 45,573 கி.மீ., இயக்கப்பட்டதில், 2.08 லட்சம் ரூபாய், சி.என்.ஜி., மூலம் எரிபொருள் செலவு குறைந்து உள்ளது. அதேபோல், 6 கோட்டங்களில் இயக்கப்பட்ட, 12 பேருந்துகளில் சி.என்.ஜி., மூலம் எரிபொருள் செலவு குறைந்துள்ளது. டீசல் பேருந்துக்கு இணையாக இந்த பேருந்துகளும் ஓடும். 17 சதவீதம் கூடுதல் மைலேஜ் கிடைக்கும். எரிபொருள் செலவு, 15 சதவீதம் குறையும். இந்த பேருந்துகள் முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது, முக்கிய பணிமனைகளில் இயற்கை எரிவாயு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu