தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X
ரம்ஜான் விடுமுறையில் கொல்லிமலையின் இயற்கை அழகில் மூழ்கிய சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் குதூகலம்

தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் குதூகலமடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை அரிய வகை மூலிகைகள் நிறைந்த ஒரு சுற்றுலா தலமாகும். நகர வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் மக்கள் தூய்மையான காற்று, தண்ணீரில் குளித்து மகிழ இதுபோன்ற இயற்கை சூழ்ந்த மலைகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்குப் படையெடுத்தனர். கொல்லிமலைக்கு குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்தவர்கள், வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி பாதையில் செல்லும்போதே ஒருவித மகிழ்ச்சியை அனுபவித்தனர். அங்குள்ள மாசிலா அருவி, நம்மருவி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், பின்னர் வாசலூர்பட்டியில் உள்ள படகு இல்லத்தில் பரிசல் சவாரி செய்து குதூகலமடைந்தனர். இதையடுத்து, அரப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியசாமி கோவில், எட்டுக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மன அமைதியுடன் வீட்டுக்குத் திரும்பினர்.

Tags

Next Story