மகளிர் உரிமைத் தொகைக்கு டோக்கன்: சேலம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு ‘நோ’ ரேஷன்

மகளிர் உரிமைத் தொகைக்கு டோக்கன்: சேலம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு ‘நோ’ ரேஷன்
X
Salem News Today: சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு டோக்கன் விநியோகத்தால் ரேஷன் கடைகளில் 3 நாட்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனருமான சங்கர் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பேசுகையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் எனும் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்து, அதனை முறையாக செயல்படுத்தும் வகையில் இதில் தனி கவனம் செலுத்தி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு நேரடியாக இந்த திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்.

வருகிற 24ம் தேதி முதற்கட்டமாக இதற்குரிய விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் வீடுகளுக்கே சென்று விண்ணப்பத்துடன் கூடிய டோக்கன்களை வழங்க உள்ளனர்.

இந்த பணியில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். குறிப்பாக இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதில் எவ்வித சந்தேகம் ஏற்பட்டாலும் உடனுக்குடன் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் அனைத்து விவரங்களும் ஏற்கனவே முழுமையாக உள்ளதால் தேர்தல் நடைமுறையை போன்றே வெளிப்படை தன்மையுடன் துல்லியமாக பணிகள் நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பகுதியில் இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களை உதவி கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் அனைவரும் நேரில் ஆய்வு செய்திட வேண்டும். குறிப்பாக இப்பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களில் தொடங்கி அனைத்து நிலை அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கு மெய்யனூர் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் தொடக்க பள்ளி, தளவாய்பட்டி சமுதாய நலக்கூடம் மற்றும் தாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னேற்பாடு பணிகளான மாதிரி பதிவேற்றம் நடைபெற்றதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் ஆகியோர் உடனிருந்தனர்

வரும் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, இன்று முதல் ரேஷன் கடை பணியாளர் டோக்கன் விநியோகம் செய்ய உள்ளதால், 3 நாட்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா