சேலம் நகரின் பழைய ராஜா திரையரங்கம், புதிய வணிக வளாகம் மாற்றம்

64 ஆண்டுகளுக்குப் பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டர்
சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகர்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டர் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களே பொதுமக்களின் பிரதான பொழுதுபோக்காக விளங்கிய காலத்தில், கிராமப்புறங்களில் டூரிங் தியேட்டர்கள் என அழைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகை திரையரங்குகளே காணப்பட்டன. அப்போது கிராமமாக இருந்த வாழப்பாடியில், அப்போதைய தொழிலதிபர்களான வெங்கடாசல படையாட்சி, ஆறுமுகம் கவுண்டர், சுப்பராய உடையார், துரைராஜ் நாய்க்கர் ஆகியோரது கூட்டுமுயற்சியில், 1961-ஆம் ஆண்டு ராஜா தியேட்டர் என்ற பெயரில் வாழப்பாடி-கடலூர் சாலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இத்திரையரங்கத்தை 1961 நவம்பர் 5-இல் கவிஞர் கண்ணதாசன் தலைமையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்துவைத்தார். முதன்முதலாக 'பாலும் பழமும்' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்நாட்களில் அதிநவீன ஒலி-ஒளி கருவிகள் பொருத்தப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்ததால், உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி, சேலம், ஆத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்து திரைப்படங்கள் பார்த்தனர். இத்திரையரங்கில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான 'கூண்டுக்கிளி' திரையிடப்பட்டபோது, இரு ரசிகர் கூட்டங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'பணமா? பாசமா?' என்ற திரைப்படம் தொடர்ந்து 48 நாட்கள் திரையிடப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இத்திரையரங்குக்கு கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவர் ஜீவானந்தம், முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தி, முன்னாள் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் மூடப்பட்டிருந்த இந்த வரலாற்று சின்னம், தற்போது பிரபல சித்த மருத்துவர் குடும்பத்தினருக்கு விற்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. 64 ஆண்டுகள் பழைமையான இந்த தியேட்டர் அமைந்திருந்த இடம் விரைவில் வணிகவளாகமாக மாறவுள்ளது. பலரின் மனதைக் கொள்ளைகொண்ட மறக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள் அகற்றப்படும்போது மனம் வருந்துவதைத் தவிர்க்க முடியவில்லை என்று சினிமா ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu