டிக்கெட் எடுக்காமல் ஏறிய கும்பல்.. பாதி வழியில் நடந்த சண்டை.. எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடுமை
தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்.
Salem News Today - கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் செல்லும் டாடா நகர் விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயிலில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
அதன்படி, எர்ணாகுளம் ரயில்நிலையத்திலிருந்து நேற்று காலை புறப்பட்ட விரைவு ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக பகல் 2.50 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனிடையே சேலத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கருப்பூர்-தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தது.
அப்போது முன்பதிவு பெட்டியில் (எஸ்.4) பயணச்சீட்டு இல்லாமலும், முன்பதிவு செய்யாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் ஏறினர். இதனால் அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும், பயணச்சீட்டு இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தகவலின்பேரில் அங்கு விரைந்த பயணச்சீட்டு பரிசோதகர், சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், சேலம் ரயில் நிலைய போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த ரயில் தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் மாலை 3.07 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி கமிஷனர் ரதீஷ் பாபு, ஆய்வாளர் ஸ்மித் மற்றும் சேலம் ரயில் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் தின்னப்பட்டி ரயில் நிலையம் சென்றனர். அப்போது டாடா நகர் விரைவு ரயிலில் குறிப்பிட்ட முன்பதிவு பெட்டியில் ஏறிய பயணிகளை கீழே இறக்கிவிடப்பட்டனர். சுமார் 90 ஆண் பயணிகளும், 25 பெண் பயணிகளும் என மொத்தம் 115 பேரை இறக்கிவிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர், சேலம் ரயில் நிலைய போலீசார் அறிவுரை கூறினர்.
இதன் காரணமாக டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பின் புறப்பட்டு சென்றது. இதனிடையே கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலில் ஏற்றி போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதேபோல் தென்னிந்தியாவில் வேலை செய்துவரும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில்களில் தான் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவிலிருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களிலும், கேரளா மாநிலத்திலிருந்து ஜோலார்பேட்டை மார்கமாக வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களிலும், அதேபோல் தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களிலும் வடமாநிலத்தவர்கள் டிக்கெட் எடுக்காமலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது பல ஆண்டுகளாகவே தொடர்கதையாகி வருவதும், மேலும் முன்பதிவு பயணிகளிடையே தொந்தரவு செய்வதும் அதிகரித்துக்கொண்டேதான் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu