மனு அளித்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு கைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
மாற்றுத்திறனாளிக்கு ரூ.12,500/-மதிப்பிலான சிறப்பு கைப்பேசியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
சேலத்தில் சிறப்பு கைப்பேசி கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு 5 நிமிடத்தில் ரூ.12,500/-மதிப்பிலான சிறப்பு கைப்பேசியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (13.03.2023) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 310 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 31மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கற்பகம் என்பவர் தனக்கு சிறப்பு வகை கைப்பேசி கோரி மனு அளித்தார். இம்மனுவின் மீது பரிசீலனை மேற்கொண்டு, 5 நிமிடத்தில் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கென வழங்கப்படும் ரூ.12,500/- மதிப்பிலான சிறப்பு கைப்பேசி வழங்கப்பட்டது. மேலும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,050/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,63,250/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu