பள்ளி குழந்தைகளை வரழைத்து நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துரைத்த ஆட்சியர்

பள்ளி குழந்தைகளை வரழைத்து நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துரைத்த ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர்  கார்மேகம்.

குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அரசு பள்ளி குழந்தைகளை ஆட்சியரகத்திற்கு அழைத்து ஆட்சியரக நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

குழந்தைகள் தினத்தையொட்டி இன்று (14.11.2022) ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியரகத்திற்கு அரசு பள்ளி குழந்தைகளை அழைத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துரைத்து கலந்துரையாடினர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் நாள் பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

குழந்தைகள் தினத்தையொட்டி இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பொருட்டும், அரசு நிர்வாகம் செயல்படும் முறையினை அறிந்து கொள்ளும் வகையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களின் செயல்படும் முறைகள் குறித்து பள்ளி குழந்தைகளை தொடர்புடைய அலுவலகங்களுக்கு அழைத்து சென்று அலுவலக நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், இன்றைய தினம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நாட்களில் நடைபெற்றுவரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் நடைமுறை குறித்தும், மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் பேரிடர் மேலாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட கருவூல அலுவலக செயல்பாடுகள், காணொலி காட்சி ஆய்வு கூட்ட அறை, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களை பள்ளி குழந்தைகள் பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி குழந்தைகளுடனான கலந்துரையாடலின் போது தெரிவிக்கையில், உங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நானும் உங்களை போன்று அரசு பள்ளியில் பயின்று மாவட்ட ஆட்சியர் நிலைக்கு உயர்ந்துள்ளேன். படிக்கும் காலங்களிலேயே இதுபோன்ற அரசு நிர்வாக செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதால் எதிர்காலத்தில் நீங்களும் உயர்ந்த நிலையை அடைவதற்கு வாய்பாக அமையும் என்பதால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசுப்பள்ளி மாணவர்களை உலக தரத்திலான சிறந்த மாணவர்களாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வியில் கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டு கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். இதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆட்சியரகத்திற்கு வருகை புரிந்த அனைத்து குழந்தைகளுக்கும் ரோஜா மலர்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மயில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் இரா முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!