மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு - முதல்வர் ஸ்டாலின்
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றன. நடப்பாண்டு குறுவை, சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் இருந்து சேலம் சென்றடைந்தார். இன்று காலை 10.30 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் திறந்து விடுகிறார்.
அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை ஆய்வு செய்வதற்காக நேற்று திருச்சிக்கு சென்ற முதலமைச்சர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை மாவட்டம் சென்றார். அங்கு ஆயிரத்து 36 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் கல்லணை சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu