சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.. பொதுமக்களிடம் குறைகள் கேட்பு...
சேலத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல் முறையாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து கடந்த 1.2.2023 அன்று வேலூர் மாவட்டத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று சேலம் சென்ற முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதியோர் ஓய்வூதியம் எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, நிலுவையில் உள்ள முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் விவரங்கள், இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்ட விவரங்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து அலுவலக வருகைப் பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டி முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டியும் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அந்த மனுக்களுக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu