சேலம் மாவட்டத்தில் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம்
பைல் படம்
சேலம் மாவட்டத்தில் வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000/- ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை வழங்கிட தமிழக முதல்வரால் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000/- ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு தகுதிகளான இருசக்கர வாகனம் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய Gearless / Auto gear கூடிய எஞ்சின் 125cc சக்திக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 01.01.2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் வக்ஃப் வரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களின் மனுதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், 18 வயதிலிருந்து 45 வயதுடையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மான்ய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் 1.பேஷ் இமாம், 2.அரபி ஆசிரியர்கள், 3.மோதினார், 4.முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்களான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (Ration Card), வயது சான்றிதழ், வருமான சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதிச் சான்று, ஒட்டுநர் உரிமம் / LLR, வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறார் என்ற சான்று பெற்று மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளர் மேலொப்பமும், விலைப்பட்டியல் / விலைப்புள்ளியுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 110-இல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் வந்து விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளலாம், மேலும், தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் மானியத் தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu